திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கிராவல் மண் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், பட்டா இடங்களில் கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டுமென கிராவல் மண் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய கிராவல் மண் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன் கூறும்பொழுது, "திண்டுக்கல் மாவட்டத்தில் ஏறத்தாழ 1000க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் உள்ளது. இந்த டிப்பர் லாரிகள் மூலமாக நாங்கள் கிராவல் மண், மணல், ஜல்லி போன்றவைகளை சப்ளை செய்து வருகிறோம்.
இத்தொழிலை நம்பி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கிராவல் மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்றுநோய் ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் தொழில்வாய்ப்புகளை இழந்துவிட்டோம். தற்போது கிராவல் மண் எடுப்பதற்கும் தடை விதித்துள்ளதால் ஒருபக்கம் எங்களது வாழ்வாதாரமும், இன்னொரு பக்கம் புதிதாக கட்டடம் கட்டும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிராவல் மண் மட்டுமல்லாமல் மணல், ஜல்லி, செங்கல் என்று எதுவும் எங்களால் சப்ளை செய்ய முடியவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியரிடம் எங்களது கோரிக்கையை முன்வைத்து மனு அளித்துள்ளோம்.
அவர் உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்கள் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கட்டட தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என்று கூறினார்.