திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ளவர் அமிர்தம். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராவார்.
அவர் தலித் என்பதால் ஒரு குறிப்பிட்ட இடைநிலை சமூகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் அவரை பணி செய்யவிடாமல் தடுத்து வந்துள்ளனர்.
குறிப்பாக, ஊராட்சி மன்றச் செயலாளரான எம்.சசிகுமார் என்பவர் அமிர்தமிடம் இருக்க வேண்டிய ஊராட்சி அலுவலகத்தின் சாவியையும், பஞ்சாயத்து தலைவர் முத்திரையையும் பறித்துவைத்து அதிகாரம் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி அன்று சுதந்திர தின விழாவையொட்டி, ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தொடக்கப்பள்ளியில் தலித் என்ற காரணத்திற்காக அவரை தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்துள்ளனர்.
இந்த செய்தி ஊடகங்களின் வழி தமிழ்நாடு முழுவதும் சென்றடைந்தது. சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமலஹாசன், "கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல். சாதிப் பிணி ஒழிய, நம் குரல்கள் ஒன்றுபடாவிட்டால் குரலற்றவர்களின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடரும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை குரல் கொடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து தலித் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து பதிவு செய்து, அங்கு நடைபெற்ற சாதி பாகுபாடு தொடர்பாக மூன்று வாரத்தில் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சாதியின் பெயரால் வன்கொடுமை புரிந்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு இயக்கங்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.