சென்னை மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட தொடக்க விழா இன்று நடைபெறவுள்ளது.
அந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயர் மட்டும் இடம்பெறவில்லை.
இது சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று மாலையில் வெளியான தனியார் நிறுவன விளம்பரத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.
நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர் கூட்டம், மருத்துவ வல்லுநர் குழு கூட்டத்திலும் பங்கேற்காமல் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக, அஇஅதிமுக செயற்குழுக் கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யாரென எழுந்த கேள்வியும், அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் காரசாரமான விவாதம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.