சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு மீது விசாரணைக்கு நடைபெற்றபோது, சித்த மருத்துவம் உள்பட இந்திய மரபு மருத்துவ முறைகள் புறக்கணிக்கப்படுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், மத்திய - மாநில அரசுகளுக்கு 14 கேள்விகளை எழுப்பி, அதற்கு பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில் வழக்கு இன்று (ஆகஸ்ட் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் சித்த மருத்துவத்திற்கான ஆராய்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் கடந்த 10 ஆண்டுகளில் சித்தா, யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? என்பது குறித்து மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.