சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடன் படித்துவந்த இடைநிலை சாதியைச் சேர்ந்த சக மாணவி ஒருவருடன் பேசிய காரணத்தால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டனர்.
அதில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ரகு, ரஞ்சித் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணைக் கோரி தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அம்மனுவில், "சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இந்த வழக்கை சேலத்தில் இருந்து மதுரை நீதித்துறை நடுவர் எண் 3 வழக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிணைக் கோரி மதுரை நீதித்துறை நடுவர் முன்பாக விண்ணப்பித்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டனர். தற்போது இருவரும் உடல் நலக் குறைவால், பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி தாரணி முன்பாக இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், இந்த வழக்கில் மேலும் சிலர் பிணைக் கோரி மனு தாக்கல் செய்யதுள்ளதால் அனைத்து வழக்கையும் ஒன்றாக பட்டியலிடக் கோரி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.