கரோனா பெருந்தொற்றின் தீவிரப் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. முழு ஊரடங்கு சமயத்தில் மளிகைக் கடைகள், வியாபார நிலையங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட எதுவும் திறக்கக்கூடாது என்று உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அந்த உத்தரவு மீறப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் நகர் பகுதியை அடுத்துள்ள புறவழிச்சாலை கீழ்நாத்தூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக காற்றில் பறக்கவிட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. திருவண்ணாமலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பூக்களை எடுத்து வந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் புறவழிச்சாலை கீழ்நாத்தூரில் சந்தை அளவில் வியாபாரம் செய்துவருவது வழக்கம்.
இந்நிலையில், முழு ஊரடங்கு பற்றி சிறிதும் கவலைப்படாமல் இன்று (ஆகஸ்ட் 9) அங்கு பூ வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை சிறிதும் பொருட்படுத்தாமல் அலட்சியப் போக்கில் முகக் கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியையும் கடைபிடிக்காமல் ஏறத்தாழ 15க்கும் மேற்பட்டோர் புற்றீசல்கள் போல் கூட்டமாக கூடி பூ வியாபாரம் செய்தனர்.
நேற்று (ஆகஸ்ட் 8) ஒரே நாளில் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7610ஆக உயர்ந்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பூ வியாபாரிகள் பொறுப்பற்ற நிலையில் செயல்படுவதே நோய்த்தொற்று மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித்தருவதாக அமைந்துள்ளது.
எனவே, பொறுப்பற்ற வியாபாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து, நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை உறுதியுடன் நடைமுறைப்படுத்தி பின்பற்ற செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.