இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்குகள் அவரவர் மத வழக்கங்களின்படி உரிய மரியாதையுடன் நடைபெற அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டல்கள் உள்ளன. இது மதிக்கப்படும் அதே வேளையில், அக்குடும்பத்தினரின் நியாயமான சில எதிர்பார்ப்புகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
முக்கியமாக, உயிரிழந்தவர்களின் முகத்தை இறுதியாகப் பார்க்க சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது நியாயமான விருப்பமாகும். தங்கள் பாசத்திற்குரியவர்களின் உயிர்களை இழந்து நிற்கும் உறவுகளின் துயரத்தை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, இறந்தவர்களின் முகத்தைப் பார்க்க, குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சம் 10 பேர் வரை அனுமதிக்கப்படுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். பொதுநலன் கருதி, அவர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் வர நிபந்தனை விதிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு அரசு மனிதாபிமானத்தோடு நல்ல முடிவெடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.