ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர் ஈரோட்டிலுள்ள தனது உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்க வந்துவிட்டு பின்னர் ஊர் திரும்புபோது ஈரோடு ஆர்.கே.வி. சாலைப் பகுதியிலுள்ள நகைக்கடை முன் நின்றுகொண்டிருந்த தனது நண்பரிடம் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோட முயற்சித்தார். இதனைத் தொடர்ந்து நவீன்குமாரும், அவரது நண்பரும் ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட அப்பகுதியில் இருந்த மக்கள் வாகனத்துடன் சென்றுகொண்டிருந்த இளைஞரைத் தடுத்து நிறுத்தி பிடித்தனர்.
வாகனத்துடன் பிடிபட்ட இளைஞரை அப்பகுதியினர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வாகனத் திருட்டு முயற்சி வழக்கில் கைதுசெய்யபட்ட இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினகரன் என்பதும், இருசக்கர வாகனத்தின் மீது ஆசைகொண்டு இதுபோன்று சாலையில் தவறுதலாக சாவியுடன் நிற்கும் வாகனத்தை திருடிச் செல்லும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளதும், கொஞ்ச நாள் அந்த வாகனத்தை ஓட்டிவிட்டு விற்பனை செய்துவருவதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை கைதுசெய்த காவல் துறையினர் சிறைக்கு அனுப்பிவைத்தனர்.