காரைக்கால் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வாடகை கார் மற்றும் சொந்த வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்நிலையில், கரோனா ஊரடங்கு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கியது.
இதனிடையே, அவர்கள் வாகனங்களை இயக்காத நாள்களுக்கும் சேர்த்து சாலை வரி போடப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தங்களால் சாலை வரியைக் கட்ட முடியாது என ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அரசுக்கு பலமுறை தெரிவித்தும் புதுச்சேரி அரசு அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கட்டாயமாகச் சாலை வரி கட்டச் சொல்வதாக ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் விதிக்கப்பட்டுள்ள சாலை வரியை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தை வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனர். அப்போது காவல் துறையினர் அனுமதி மறுத்ததை அடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல், அலுவலக வாயிலை இடைமறித்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மட்டும் சென்று போக்குவரத்துத் துறை அலுவலர் கலியபெருமாளைச் சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவை பெற்றுக் கொண்ட போக்குவரத்துத்துறை அலுவலர் இந்தக் கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.