இது தொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநிலத்திற்கான 50 விழுக்காடு இடங்களில் உள் ஒதுக்கீடாக 50 விழுக்காடு இடங்களுக்கான தமிழ்நாடு அரசில் பணிபுரியும் மருத்துவர்களின் உரிமையை உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மூலம் நிலை நிறுத்தியதாக முதலமைச்சர் பழனிசாமி ஓர் அறிக்கையை நேற்றைய தினம் (1.9.2020) வெளியிட்டு - திமுகவின் சாதனைகளுக்கு உரிமை கொண்டாட முனைந்திருப்பது நல்ல வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது.
ஒருவேளை முதலமைச்சருக்கு இந்த உள் ஒதுக்கீட்டின் வரலாறு தெரியவில்லை போலிருக்கிறது. அறிக்கை எழுதிக் கொடுத்த அலுவலர்களாவது அதை ஆரம்பம் முதல் விளக்கியிருக்க வேண்டும். கருணாநிதி மூன்றாவது முறையாக முதலமைச்சரான போது - முதன்முதலில் 1989ஆம் ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கு இந்த 50 விழுக்காடு உள் ஒதுக்கீடை வழங்கினார்.
கருணாநிதி வெளியிட்ட இந்த அரசாணை மற்றும் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முனைப்புடன் வாதிட்டு, உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வில் அரசு மருத்துவர்களின் உள் இடஒதுக்கீட்டு உரிமையை நிலை நாட்டியது.
திமுக ஆட்சியில் கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்திட, மலைவாழ் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கிட, ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக; அரசு மருத்துவர்களுக்கு வழங்கிய கல்வியுரிமையை அன்றும் 'கே.துரைசாமி' வழக்கில் உச்ச நீதிமன்றம் நிலைநாட்டியது; இன்றும் அதே அடிப்படையில் நிலைநாட்டியிருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொருத்தமான அங்கீகாரம் என்று மகிழ்ச்சியடையும் அதே வேளையில்; இந்தத் தீர்ப்புக்கு அடித்தளம் அமைத்து - அரசு மருத்துவர்களின் உரிமை பாதிக்கப்படாமல், மிகுந்த கவனத்துடன் திமுக அரசு தான் பாதுகாத்து வந்தது" என தெரிவித்துள்ளார்.