கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் "இந்தியாவை பாதுகாப்போம்" என்ற பெயரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று (ஆகஸ்ட் 8) நடைபெற்றது. இதில் ஐஎன்டியூசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, எல்பிஎஃப், எம்எல்எஃப், ஏஐசிசிடியூ, எஸ்டிடியூ ஆகிய அமைப்புகளின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது, மின்சார நிறுத்த சட்டத்தை கைவிட வேண்டும், சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை 2020 நிறைவேற்றக் கூடாது, கரோனா தாக்கத்தை மையமாக வைத்து நிலக்கரி சுரங்கங்கள் விண்வெளி அறிவியல் வங்கி ரயில்வே போன்றவற்றை தனியாருக்கு விற்கக் கூடாது, வேலைநீக்கம் சம்பள குறைப்பு போன்றவற்றை கைவிட வேண்டும், ஊரடங்கு காலத்திற்கும் முழு சம்பளத்தை வழங்கிட வேண்டும், வருங்கால வைப்பு நிதி சந்தாவை 12இல் இருந்து 10 விழுக்காடாக குறைக்கக் கூடாது,
வருமானவரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மார்ச் முதல் ஜூலை வரை மாதத்திற்கு தலா ரூ 7,500 வீதம் 37 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிட வேண்டும், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சம்பளத்தையே ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும், மின்வாரியம், பால்வளம், போக்குவரத்து, வங்கி, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் நோய் தொற்றினால் ஒப்பந்த தொழிலாளர்கள் யாரேனும் இறந்திருந்தால் அவர்களது குடும்பங்களுக்கு 50 லட்சம் காப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். கோவை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.