தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. கிராம ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடியாகவும், ஒன்றியப் பெருந்தலைவர், துணைத் தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகமாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.
இவற்றில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 இடங்களில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியது. இதனால் பெரியகுளம் ஒன்றியத்தை திமுக கைப்பற்றி விடும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், 8ஆவது வார்டில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் அதிமுகவிற்கு மாறியதால் திமுகவின் பலம் குறைந்தது.
இதைத் தொடர்ந்து ஒன்றியத் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மூன்று முறை நடத்தப்பட்ட தேர்தலை அதிமுக புறக்கணித்தது. இதன் காரணமாக தற்போது வரை பெரியகுளம் ஒன்றியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் காலியாகவே உள்ளது. இந்நிலையில், நேரடி வாக்குப்பதிவு முடிந்து ஒன்பது மாதமாகியும், ஒன்றியத் தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தப்படுவதை கண்டித்து திமுக, அமமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வடுகபட்டி சாலையிலுள்ள பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயக விரோதமாக ஆளும் அதிமுக செயல்படுவதாகக் கூறி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், கைகளில் பதாகைகள் ஏந்தியவாறும், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேலும் திமுக, அமமுகவினர் வெற்றி பெற்ற ஒன்றிய வார்டுகளுக்கான நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தனர்.