காணாமல்போன 10ஆம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக்கோரி, அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று (செப்.21) வந்தது.
அப்போது காணொலி காட்சி மூலம், மாணவியை ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணியாற்றிய ஏற்கனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள், பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோய் திருமணமான ஆண்களை மணந்து கொள்ளும் இளம்பெண்கள் துன்புறுத்தப்படுவதை காணமுடிகிறது என வேதனை தெரிவித்தனர்.
திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி மீண்டும் திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினர்.
மேலும், பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோகும் இளம்பெண்கள் திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக அடுத்த வாரம் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.