மதுரை மேலமடைப் பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் பிணைக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், "நான் 30 ஆயிரம் கடன் வழங்கி கடன் தொகை 30 ஆயிரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அந்தப் பணத்திற்கு வட்டி கேட்கப்பட்டதாக பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மிகப்பெரிய பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு காய்கறி உணவு வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு யுனெஸ்கோ (UNESCO) மற்றும் பல அமைப்புகளிடம் பாராட்டு பெற்றுள்ளேன். எனது நற்பெயரைக் கெடுக்கும்விதமாக என் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்பிணை வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதி, மனுதாரர் தரப்பில் வட்டிக்கு பணம் கொடுக்கவில்லை. வட்டி கேட்டு மிரட்டவும் மாட்டோம். அடமான பாத்திரங்கள் எதுவும் எழுதி வைக்கவில்லை என்பன போன்ற உறுதிமொழிகளை கொடுத்தால் முன்பிணை வழங்குவதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மூன்று கோரிக்கைகளுக்கும் உறுதிமொழி வழங்கியதை அடுத்து நீதிபதி முன்பிணை வழங்குவதாகத் தெரிவித்தார்.