தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியான 17 வயது சிறுமியும் காதலித்து நெருக்கமாகப் பழகியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்தப் பெண் கருவுற்றார். பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதால் அவரது கர்ப்பத்திற்கு காரணமான அருண் மீது வழக்குப்பதிந்த காவல் துறை, அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது.
இதனிடையே, கைதுசெய்யப்பட்ட அருண் தன்னை பிணையில் விடுவிக்க செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், "எங்கள் குடும்பமும், அந்த பெண்ணும் குடும்பமும் நெருங்கிய உறவினர்கள்தான். நாங்கள் இருவரும் காதலித்த ஒருவரை ஒருவரை மனதார காதலித்துவருகிறோம். நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகியதால், அந்தப் பெண் கருவுற்றார்.
பாதிக்கப்பட்ட பெண் பதினேழு வயதானவர் என்பதால் அவர் 18 வயதை அடைந்தவுடன் அவரைத் திருமணம் செய்துகொள்வேன் என உறுதியளிக்கிறேன்.
எனவே, என் மீது போடப்பட்டுள்ள போக்சோ சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இளந்திரையன் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், "18 வயது முடிந்தவுடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை பிணை வழங்க இரு வீட்டாரும் இணைந்து உறுதிமொழிப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.