இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத அடையாளங்களை அரசியலுக்குப் பயன்படுத்தி கலவரங்களை வளர்ப்பதும், அதன் மூலம் கட்சியின் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதும்தான் பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இத்தகைய முயற்சிகளை அக்கட்சி எடுத்து வருவதை கண்கூடாக பார்க்கவும் முடிகிறது.
இந்நிலையில் அதே நோக்கத்தோடு தான் அத்தகையதொரு அரசியலை மேற்கொள்ளவும், அதற்கான வாய்ப்பாகவும் தமிழகம் தழுவிய அளவில் வேல் யாத்திரையை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டிருந்தது.
அத்தகையதொரு அறிவிப்பு வந்தவுடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததோடு, கலவரத்திற்கு வித்திடும் அந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
தற்போது பாஜக நடத்த திட்டமிட்டிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வரவேற்கிறது. அனுமதி கேட்டு பாஜக நீதிமன்றத்திற்கு சென்று மேல் முறையீடு செய்தாலும், அங்கும் உறுதியாக வாதாடி அனுமதி மறுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன், வகுப்புவாத அரசியல் எந்தவொரு வடிவத்திலும் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனும் நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.