வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோசூர் பவுண்டு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சிவராமன் (17) அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலைக்கு ஜெனரேட்டர் மூலம் மின்விளக்குகளால் அலங்காரம், சிறப்பு பூஜை செய்து மாட்டு வண்டியில் வைத்து கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டுசென்றனர்.
அப்போது சிவராமன் விநாயகர் சிலையை சுத்தம் செய்துவிட்டு மாலை அணிவிக்க முயன்றபோது அலங்கார மின்விளக்கு வயரிலிருந்து கசிந்த மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவராமனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிவராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம், உதவி ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.