சென்னை, மணலி, எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் கனரக வாகனம் மூலம் விபத்துகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், துணை ஆணையர் கிருஷ்ணராஜ் ஆகியோர் சென்னை துறைமுகம் பூஜ்ஜியம் நுழைவாயிலில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் செல்லக்கூடிய எண்ணூர் விரைவு சாலை, மணலி சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களிடம், "எண்ணூர் விரைவு சாலையில் கனரக வாகனம் மூலமாக ஏற்படும் விபத்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறோம்.
கனரக வாகனம் மூலமாக விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் இரண்டு நாள்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சென்னை துறைமுகம் அலுவலர்கள், கனரக வாகனம் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், சுங்கத்துறை அலுவலர்கள், பெட்டகம் முனையம் அலுவலர்கள், போக்குவரத்துத் துறை அலுவலர்களுடன் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு எடுப்போம்" எனத் தெரிவித்தார்.