சென்னை எர்ணாவூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் துறைமுகத்திற்குச் செல்லக்கூடிய கனரக வாகனங்களின் அணிவகுப்பினாலும் ஆக்கிரமிப்பினாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துவருகின்றனர்.
மாதவரம் மஞ்சம் பாக்கத்திலிருந்து காசிமேடு ஜீரோ கேட்டுவரை, நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் ஏற்றுமதி-இறக்குமதிக்காக மணலி விரைவுச்சாலை, எண்ணூர் விரைவுச்சாலை வழியாகச் சென்றுவருகின்றன.
இந்நிலையில் போக்குவரத்துக் காவல் துறையின் அலட்சியத்தால் பொதுமக்கள் செல்லும் சாலையில் கண்டெய்னர் லாரிகளின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியுற்றுவருகின்றனர்.
போக்குவரத்துக் காவல் துறையினர் பணத்தைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு பொதுமக்கள் செல்லக்கூடிய சாலைகளில் கண்டெய்னர் லாரிகளை அனுப்புவதால் மாநகரப்பேருந்து, இருசக்கர வாகன ஓட்டிகள், கார்களில் பணிக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகவும் பாதிப்படைவதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.
மூன்று வழித்தடங்களிலும் கண்டெய்னர் லாரிகள் ஆக்கிரமிப்பினால் அரைமணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு இரண்டு மணி நேரம் ஆவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கண்டெய்னர் லாரி ஆக்கிரமிப்பினால் இளம் தம்பதியினர் உயிரிழந்து ஐந்து கண்டெய்னர் லாரிகள் உடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே போன்று லாரிகள் சாலையில் ஆக்கிரமித்து இருப்பது வாகன ஓட்டிகளை மிகவும் சிரமம் அடைய செய்துள்ளது.
கண்டெய்னர் லாரி ஆக்கிரமிப்பினால் கையூட்டுப் பெறுவதாக எழுந்த புகாரையடுத்து போக்குவரத்துத் துணை ஆணையர் மாற்றப்பட்ட நிலையிலும் மீண்டும் அதே நிலை தொடர்வதால் புதிய துணை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.