கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜனை தமிழ்நாடு கொண்டு வருவதற்கும் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
நேற்றிரவு (மே 20) அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஹாங்காங்கிலிருந்து 4 சரக்கு விமானங்கள் சென்னை பழைய விமான நிலைய சரக்ககப் பிரிவுக்கு வந்தன. அந்த விமானங்களில் 50 ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் வந்திறங்கின.
நள்ளிரவாக இருந்தாலும், மற்ற பணிகளை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, இந்த 50 ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகளையும் உடனடியாக டெலிவரி கொடுத்து அனுப்பினர். மருத்துவ உபகரணங்கள் டெலிவரி செய்வதில் காலதாமதம் ஏற்படாமல் செயல்படுவதைக் கண்காணிக்க சுங்கத் துறை, விமான நிலைய அலுவலர்கள் இணைந்து ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.