சென்னை: மதுரவாயலில் அருகே திருமண நாளை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த மதுரவாயல் கங்கா நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சந்தியா (26) என்ற பெண்ணோடு, கடந்தாண்டு(2019) திருமணம் நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி, இவர்களுக்கு முதல் ஆண்டு திருமணநாளாகும். தனது தாய் வீட்டிற்குச் சென்று திருமண நாளை கொண்டாடலாம் என கணவன் கூறியுள்ளார். அதற்கு சந்தியா திருமணமாகி ஓராண்டு முடிவடைந்த நிலையில், இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றும், தற்போது போதிய வருமானம் இல்லாததால் தேவை இல்லாமல் வீண் செலவு செய்து திருமண நாளை கொண்டாட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். சந்தியா வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் மாலையில் தனது மனைவியை சுரேஷ் செல்போனில் தொடர்பு கொண்டபோது, சந்தியா செல்போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து அவரது தாயை, வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.
சுரேஷின் தாய் சென்று பார்த்தபோது சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் சந்தியாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்துபோன சந்தியா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். திருமணமாகி ஓராண்டு ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முதல் திருமண நாளை கொண்டாடுவதில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.