மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ‘பயோமெட்ரிக்’ எனப்படும், கைவிரல் ரேகைப் பதிவு முறையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் விலையில்லா ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுவந்தன.
இந்நிலையில் கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும்பொருட்டு தமிழ்நாடு அரசு நான்காயிரம் ரூபாயும், 14 வகையான மளிகைப் பொருள்களையும் வழங்க உத்தரவிட்டது.
பொருள்கள் பெற ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும்பொருட்டும், தாமதமின்றி நிவாரண தொகை, பொருள்களைப் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பு முறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
மேலும் தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் வேகம் நாளுக்கு நாள் குறையத் தொடங்கியதால் இன்றுமுதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் கை ரேகை பதிந்து குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை வாங்க அரசு உத்தரவு பிறப்பித்து நடைமுறைக்கு வந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாக்களிலும் மொத்தம் இரண்டு லட்சத்து 71 ஆயிரத்து 107 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
பயோமெட்ரிக் முறை தொடக்கம்
மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ரேஷன் கடைகளில் மாதத்தின் முதல் வாரம் என்பதாலும், பொருள்கள் இருப்பு வரவில்லை என்பதாலும் கடைகள் திறக்கப்படவில்லை. ஒரு சில கடைகளில் மட்டுமே கைரேகைப் பதிவு முறையைப் பயன்படுத்தி கடந்த மாதத்திற்கான பொருள்கள் பெறாதவர்களுக்கு மட்டுமே பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.