வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு அரசு சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் வீரமணி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் விருதம்பட்டு பகுதியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகிகள் பதவியேற்பு கூட்டத்திலும் வீரமணி கலந்துகொண்டார்.
பின்னர் அமைச்சர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழ்நாடு அரசு கரோனாவை கட்டுபடுத்துவதில் முழுமூச்சாக ஈடுபட்டுவருகிறது. எல்லா தரப்பு மக்களுக்கும் எளிதில் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் நேற்று இரண்டாயிரம் மினி கிளினிக்குகள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதில் முதற்கட்டமாக இரண்டாயிரம் கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கும்.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் ஆங்காங்கே முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த முறைகேடுகளுக்கும் அரசுக்கும் சம்மந்தமில்லை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே எங்கள் மீது குறைகளை கூறுகிறார்கள். இதில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான், இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாரபட்சமின்றி உரிய நடவடிக்கையை எடுத்துவருகிறார் " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக கட்சியின் பொதுச்செயலாளராக நமது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த துரைமுருகன் பதவிக்கு வந்திருப்பது பாராட்டுக்குரியது" என்று கூறினார்.