இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக சட்டதிட்ட விதிமுறைகளின்படி, கழகத்தில் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவைப் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தலுக்கான நிறைவுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.
உறுப்பினர்களாக இருந்து பதிவைப் புதுப்பிக்காதவர்கள், விடுபட்ட உறுப்பினர்களைக் கழகத்தில் சேர்ப்பதற்காக, கழக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்திலிருந்து பெற்றுச் சென்ற உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை உடனடியாகப் பூர்த்தி செய்து, உரிய கட்டண தொகையுடன் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எக்காரணத்தைக் கொண்டும் இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. ஆகவே, மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினர் சேர்ப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு, உரிய காலத்திற்குள் இப்பணியினைச் செய்துமுடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, நடைபெற உள்ள கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.