கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த சென்னை உயர் நீதிமன்றம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நேரடியாக நீதிமன்ற அறையில் வழக்குகளை விசாரிக்க உள்ளது. இதனிடையே, நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் வழக்குரைஞர்கள் கரோனா வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அறிவுறுத்தலின் படி வழக்குகளில் ஆஜராகும் வழக்குரைஞர்கள், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நீதிமன்றம் நேரடி விசாரணையில் பங்கேற்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், "பார்கவுன்சிலின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வரும் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை நடைபெற உள்ளது.
அவ்வாறு வழக்குகளில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் கருப்பு அங்கிகளை தவிர்த்து வெள்ளை சட்டையுடன் நெக் பேண்ட் (neck band) மட்டும் அணிந்து ஆஜராகலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.