இந்திய சிறைகளின் 2019ஆம் ஆண்டின் நிலவரம் குறித்த புள்ளிவிவரம் ஒன்றை உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய குற்றப் பதிவேடுகள் பணியகம் புள்ளிவிவரங்களை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளின் நிலவரம் குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக தற்போது தமிழ்நாட்டின் சிறைகளில் 14 ஆயிரத்து 707 பேர் உள்ளனர். அவர்களில் 77 நபர்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புள்ளி விவர அறிக்கையின்படி தற்போது சிறையில் உள்ள நபர்களில் 13 ஆயிரத்து 964 ஆண்களும், 743 பெண்களும் உள்ளதாக அறிய முடிகிறது.
அவர்களில் 195 பேர் முதுநிலை பட்டதாரிகள், 1278 பட்டதாரிகள், 640 பேர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி அறிவு பெற்றவர்கள். 2955 பேர் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்றவர்கள், பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் 5 ஆயிரத்து 286 பேர், கல்வியறிவற்றோர் நான்காயிரத்து 353 பேராவர். மத நம்பிக்கை அடிப்படையில், அவர்களில் 11 ஆயிரத்து 495 பேர் இந்துக்கள், 1617 பேர் இஸ்லாமியர்கள், 1594 பேர் கிறிஸ்தவர்கள், ஒரு சீக்கியர் தற்போது தமிழ்நாடு சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
ஆப்பிரிக்கர்கள் 7 பேர், வங்கத் தேசத்தைச் சேர்ந்தவர்கள் 16 பேர், நேபாளிகள் 7 பேர் பாகிஸ்தானி ஒருவர், இலங்கையைச் சேர்ந்தவர்கள் 55 பேர் என மொத்தமாக 119 வெளிநாட்டினர் தமிழ்நாடு சிறைகளில் உள்ளனர். சிறைக் கைதிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்யும் மாநிலங்களில் தெலங்கானா அரசு ரூ.599.99 கோடியும், தமிழ்நாடு அரசு ரூ.72.96 கோடியும் வருவாய் ஈட்டி தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளன என அப்புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் 1350 சிறைகள் உள்ளன. அதில் 141 சிறைகளைக் கொண்டிருக்கும் தமிழ்நாடு, இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோன்று இந்தியாவில் 617 கிளைச் சிறைகள் உள்ளன. தமிழ்நாட்டு 96 கிளைச் சிறைகளைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு சிறைகளில் 23 ஆயிரத்து 392 பேரை அடைக்கும் வசதி இருந்தாலும் தற்போது 14 ஆயிரத்து 707 பேரை மட்டுமே அடைத்து மொத்த சிறை வசதியில் 62.9 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என அந்த புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.