மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவிற்குள்பட்ட 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது 58ஆம் கால்வாய் திட்டம். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையிலிருந்து 33 கி.மீ. தூரம் செல்லக்கூடிய இக்கால்வாய் பல்வேறு பிரச்னைகளால் பணிகள் நிலுவையில் இருந்தன.
இதனையடுத்து, நீதிமன்ற ஆணையின்படி கடந்தாண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது. வைகை அணையின் நீர்மட்டம் 67அடியை எட்டினால் மட்டுமே 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும், பாசன தேவைக்காக நிரந்தரமாக தண்ணீர் திறப்பதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன் 58 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள போராட்டம் நடத்திவந்தனர்.
இந்தச் சூழலில், வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 67 அடியை எட்டியதால் 58ஆம் கால்வாயிலிருந்து தண்ணீர் திறப்பதற்காகப் பொதுப்பணித் துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தனர். அதன்படி வைகை அணையில் இன்று முதல் 58ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் வலது கரையில் அமைந்துள்ள மதகுப் பகுதியிலிருந்து 100 கனஅடி வீதம் 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உசிலம்பட்டி தாலுகா, நிலக்கோட்டை தாலுகா ஆகிய பகுதிகளில் உள்ள 228.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.