கரோனா தொற்றின் 2 ஆம் அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. இதன், தீவிரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில், 24 மணி நேர முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.24) முதல் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை சுமார் 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கின் போது, கரூர் மாவட்டத்தில் அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி செய்தித்தாள் வினியோகம், மருத்துவமனை, மருத்துவப் பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், அவசர ஊர்தி போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் விவசாயிகளின் விளை பொருள்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை (Petrol & Diesel, LPG Gas, etc..) எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் மேற்படி வாகனங்கள் செல்வதற்கு ஏதேனும் தடை ஏற்பட்டால், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தனிப்பிரிவின் 04324 - 296299, 9498100780 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தெரிவித்துள்ளார்.