தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து 20க்கும் மேற்பட்டோர் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இன்று (ஆக. 10) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு
அதில், “ தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்தன் அடிப்படையிலேயே அரசாணை வெளியிடப்பட்டது.
சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையே, 7, 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஆணையம் பரிந்துரைத்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கேற்ப, இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையிலேயே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் பேர் வன்னியர்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கிலிருந்து நீதிபதி விலகல்
தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, அரசாணை வெளியிடப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது.
இதில் அரசியல் காரணங்களோ, அவசரமோ ஏதுமில்லை. மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே. குறிப்பிட்ட பிரிவுக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கியதாக கருத முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வின் முன்பு இன்று (ஆக. 10) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து, நீதிபதி ஆதிகேசவலு விலகுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்குகள் வேறு நீதிபதி விசாரிப்பார் என அறிவித்த தலைமை நீதிபதி, விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஜாமீன் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு