கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தேவையின்றி மக்கள் வெளியே சுற்றித்திரிந்தாலோ அல்லது முகக்கவசம் அணியாமல் வந்தாலோ ரூ. 100 அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வரும் மக்கள் ஓரளவுக்கு முகக்கவசம் அணிந்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு சாலையில் உள்ள முத்தூர் அவுட் போஸ்டில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாலா, வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு அபராதம் விதித்தார். அப்போது, முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது முத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்கள் ஊர் பெயரிலுள்ள முகநூல் பக்கத்தில் பதிவிட இதனை வீடியோ எடுத்துள்ளார்.
இதைக்கண்ட உதவி ஆய்வாளர், இதெல்லாம் வீடியோ எடுப்பியா? எனக் கேட்டு அவரை பளார் பளார் என அடிப்பதும், அதற்கு அந்த நபர் முத்தூர் முகநூல் பக்கத்திற்காக எடுப்பதாக கூறுவதும் அந்த காணொலியில் பதிவாகியுள்ளது. இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு