விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருப்பூர் அழகுமலை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணியில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வந்துள்ள 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்கள் ரசாயனம் இல்லாத கடலைமாவு, மரவள்ளிக்கிழங்கு மாவு, வாட்டர் கலர் மூலம் விநாயகர் சிலைகளை தயாரித்துவருகின்றனர். இந்தச் சிலைகள் மூன்று அடி முதல் 12 அடி உயரம் வரையில் இருக்கும். சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்துவருகின்றனர். இந்த விநாயகர் சிலைகள் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத விநாயகர்!
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் இயற்கை முறையில் தயாரிக்கும் இந்தச் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், மது, மாமிசம், முட்டை போன்ற அசைவ உணவுகளின்றி சுய கட்டுப்பாட்டுடன் தயாரித்துவருவதாகவும் சிலை தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
விதவிதமாக வருகிறார் விநாயகர்
- விநாயகர் சிலைகளில் மிக நேர்த்தியாக சிவலிங்கத்தை தோளில் சுமந்துவரும் பாகுபலி விநாயகர்,
- பிரம்மன்-விஷ்ணு-நரசிம்ம முகம் கொண்ட விநாயகர் சிலைகள்,
- மூஞ்சுறு,
- சிங்கம்புலி,
- அன்ன வாகன விநாயகர் சிலைகள்
உள்ளிட்ட பழைய மாடல்களும்...
- புல்லட் விநாயகர்,
- பாகுபலி 2 விநாயகர்,
- ரதத்தில் வரும் விநாயகர்
உள்பட புதிய மாடல்கள் என 80-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. விநாயகர் சதுர்த்தி தொடங்கவுள்ள நிலையில் அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.