திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை, 6 மணிக்கு திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தக்ஷிணாமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர், அலுவலகத்தில் இருந்த வட்டாட்சியர் சாந்தி, துணை வட்டாட்சியர் தமிழ் ஈஸ்வரன் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
கணக்கில் வராத பணம் எதுவும் அவரிடம் உள்ளதா என்பது குறித்து விசாரித்தனர். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று அங்கு பணம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர்.
அப்போது, கணக்கில் வராத அறுபதாயிரத்து ஐநூற்று பத்து ரூபாய் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத பணம் குறித்து தொடர்ந்து 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கைப்பற்றிய பணத்துடன் இரவு 10 மணிக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிளம்பி சென்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவிநாசி தாசில்தாராக பணியாற்றி வந்த சாந்தி இன்று பணியிட மாறுதல் உத்தரவு பெற்றிருந்தார். அவர் பணிமாறுதல் பெற்ற நாளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.