மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டதை ஆதரித்து திருப்பூர் தாராபுரம் சாலையில் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.
இந்நிகழ்வில் பாஜகவின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ள எந்தவொரு மதத்திற்கும் பாதிப்பு ஏற்படாது.
அஸ்ஸாம் மாநிலத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் என சதித்திட்டத்தோடு செயல்பட்ட ஜேஎன்யூ மாணவர் பிகாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுபோல பிரிவினைவாத சக்திகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், திமுக ஆகிய மூவருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை.
அன்று ஜின்னா இந்தியாவைப் பிரித்தார். அதே வேலையை இன்று திமுக, காங்கிரஸ் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு என்பதை 200 விழுக்காடு நான் ஆதரிக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: புதிய மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி - பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்