திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் சிவசேனாபதி கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து காங்கேயம் கால்நடை திருவிழா நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்துகொண்டன. இதற்கு சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”மக்களவைத் தேர்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்தார்களோ, அதைவிட பெரிய வெற்றியை வரும் தேர்தலில் மக்கள் திமுகவிற்கு கொடுக்க இருக்கிறார்கள். இன்னும் தேர்தல் வர 2 அமாவாசைகள்தான் இருக்கின்றன. அதன் பிறகு தமிழ்நாட்டில் இருக்கும் 2 அமாவாசையும் துரத்தி, மோடிக்கு பாடம் எடுக்கப்படும்.
மேடையில் பிரதமர் மோடி திருக்குறள் அவ்வையார் போன்ற நூல்களை மேற்கோள் காட்டி பேசுகிறார். ஆனால், தமிழ் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. சமஸ்கிருதத்தை உள்ளே நுழைக்க பார்க்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடியவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்.
இங்குள்ள முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மோடிக்கு எப்படி ஜால்ரா அடிக்கலாம் என பார்த்துக்கொண்டிருக்கின்றனர். யார் மிகச்சிறந்த அடிமை என பார்க்கலாம் என்று போட்டி போட்டிக்கொண்டு ஜால்ரா அடிக்கின்றனர். 'வெற்றிநடை போடும் தமிழகம்' என விளம்பரம் கொடுக்கிறார்கள். ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் போன்றவைகளில்தான் வெற்றி நடை போடுகின்றனர். கேஸ் விலை , பெட்ரோல் விலை போன்றவைகளை குறைக்க வக்கில்லாமல் மோடி ஆட்சிக்கு ஜால்ரா அடித்து வருகின்றனர்.
எதிர்காலமாக இருந்த மாணவர்களின் கல்வி உரிமைகள்கூட பறிபோய்விட்டன. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்த்தும் கூட நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த வருடம் கூட 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும். மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் காக்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். கால்நடை நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் ஊக்க தொகையாக 500 ரூபாயும், வெற்றி பெறும் காளைகளுக்கு 5 லட்சம் ரூபாய்வரை பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது” என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "ட்ரம்பின் கையை பிடித்துக்கொண்டு பிரதமர் மோடி நின்றார். தற்போது ட்ரம்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இதுபோல், முதலமைச்சர், துணை முதலமைச்சர் கையை பிரதமர் மோடி பிடித்துக்கொண்டு நேற்று (பிப்.14) இருந்தார். எனக்கு அதுதான் நினைவில் வருகிறது. நீட் தேர்வு ரத்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அதிமுக சார்பில் அனுப்பப்பட்டது.
ஆனால் அதை டிஸ்மிஸ் செய்து திருப்பி அனுப்பியதை மறைத்த அரசாங்கம் இது. திமுக ஆட்சிக்கு வந்தால், என்னுடைய முதல் போராட்டம் நீட் தேர்வு ரத்து தொடர்பாகத்தான். சட்டப் போராட்டத்தை செய்து நிச்சயம் நீட் தேர்வை ரத்து செய்வோம்" என்றார். தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு,"அது போன்ற முடிவுகளை மு.க.ஸ்டாலின்தான் எடுப்பார் எனக் கூறினார்.
இதையும் படிங்க: பழனி-கொடைக்கானல்வரை ரோப் கார்: தேர்தல் வாக்குறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்