திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜயராஜ் (67) என்பவர் தனது இரண்டு மகன்களுக்கும் தனது சொத்துக்களை பிரித்து ஆளுக்கு 75 சென்ட் என கொடுத்து விட்டு தனது மனைவி விஜயலட்சுமி (50) இளைய மகன் விக்னேஷ் குமார் (25) இருவருடனும் திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.
விஜயராஜ் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பனியன் நிறுவனத்தில் தையற்கலைஞராகவும், மனைவி செக்கிங் வேலையும் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜயராஜை வீட்டை விட்டு வெளியேறுமாறு மனைவியும் மகனும் தொடர்ந்து வற்புறுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம் விஜயராஜை இனி வீட்டுக்கு வரக்கூடாது என விரட்டியும் உள்ளனர். சொத்துக்களை பிரித்து கொடுத்த பின்னர் தன்னை வீட்டை விட்டு விரட்டுவதாக ஆத்திரமடைந்து மனைவியையும், மகனையும் இரவு 1 மணி அளவில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் உள்ளே நுழைந்து அரிவாளால் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சென்ட்ரல் காவல்நிலைய காவலர்கள் விஜயராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.