திருப்பூர்: தமிழக அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் தொழிலாளர்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், டிசம்பர் 12ஆம் தேதி மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் சார்பில், மின் நிலைக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 8ஆம் கட்ட போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று (நவ.27) திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 170 சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், “மின் கட்டண உயர்வு குறித்து, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க 7 கட்ட போராட்டம் நடத்தியும் ஒரு சில கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். தொழில் நெருக்கடி காலத்தில், நிலைக் கட்டணம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தாங்கும் சக்தி தொழில்துறைக்கு இல்லை.
430 சதவீத நிலைக் கட்டண உயர்வு என்பது தொழிலாளர்களால் செலுத்த முடியாத ஒன்று. எனவே, அவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். பீக் அவர் கட்டணம் முழுமையாக திரும்பப் பெற வேண்டும். சோலார் மின் உற்பத்திக்கு 50 சதவீத கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும். மின்சார வாரியத்தால் தயாரிக்கப்பட்டு, தொழில் துறையினர் மீது அறிவிக்கப்பட்டுள்ள மின் டேரிஃபை மறுசீராய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் நிலை சீரடையும் வரை, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.
இல்லையெனில், 1 கோடி தொழிலாளர்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், டிசம்பர் 12ஆம் தேதி மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும். இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்த கூட்டத்தில் இது குறித்து முடிவெடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கோயில் இரண்டாம் நாள் தீபம்: ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம்!