கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் சமூக மையத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஜி.கே. வாசன், "நாம்தான் இனி காங்கிரஸ், நம்மால்தான் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும். 134 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் தேசிய அளவில் 53 இடங்களை மட்டுமே பெற முடிந்துள்ளது; எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை. மேலும் பிரதமர் கனவிலிருந்த முன்னால் தலைவரின் வாரிசுகள் விலாசம் தெரியாமல் போய்விட்டனர்.
திமுக வெற்றிபெற்றாலும் அகில இந்திய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. திமுக கூட்டணியின் பொய்ப் பரப்புரையை தமிழ்நாட்டில் மக்கள் நம்பத் தயாராக இல்லை.
இதன் பிரதிபலிப்பு வருகிற வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் தெரியவரும். அதிமுக கூட்டணியே வெற்றிபெறும். அதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் பக்கபலமாக இருக்கும். மத்திய-மாநில அரசின் நலத்திட்டங்கள் மக்களை அடைய தமிழ் மாநில காங்கிரஸ் பாலமாய் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.