தொழில்துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த வாழ்வளித்துக் கொண்டிருக்கும் நகரம் திருப்பூர். பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இங்கு பணிபுரிகிறார்கள் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
திருப்பூர் இந்த பெயரை கேட்டாலே உடனுக்குடன் ஞாபகத்திற்கு வருவது பனியன் பொருளாகத்தான் இருக்க முடியும் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையும் கடந்து உலக அரங்கில் திருப்பூர் பனியன் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. இந்தியாவை பொறுத்த வரையில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் தலைநகராக விளங்கிவருகிறது. இங்கு ஆண்டுதோறும் 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உள்நாட்டு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகும் பின்னலாடைகளில் 55 விழுக்காடு திருப்பூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது கடந்த 2017ஆம் ஆண்டில் 27 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு 26 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது. பின்னலாடை தொழில் மூலம் உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து டாலர் சிட்டி என்று பெருமை பெற்ற திருப்பூர் தமிழ்நாடு நகரங்களில் முன்னிலை பெற்று உள்ளது. இதன் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.
திருப்பூரை பொருத்தவரை படித்தவர்கள் படிக்காதவர்கள் என யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் வேலைவாய்ப்பு அளிக்கும் அட்சயபாத்திரம் போன்ற நகரம். இங்கு படிக்காத தொழிலாளி கூட வாரத்துக்கு கணிசமான சம்பளத்தை பெற முடியும் மற்ற ஊர்களை விட திருப்பூரில் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நிறைவான சம்பளம் கிடைக்கிறது. தற்போதைய நிலையில் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் அதிக அளவில் வெளிமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக பீகார் ஒரிசா மேற்குவங்காளம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் இங்கு அதிகம். இவர்களுக்கு சில நிறுவனங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. இல்லாதவர்கள் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் ஐந்து பேர், பத்து பேர் சேர்ந்து சிறிய அறையில் வாடகைக்கு குடியிருப்பதை இங்கு அதிகம் காண முடியும்.
இப்படி உள்ளூர் மக்கள் முதல் வெளிமாநில மக்கள் வரை வேலைவாய்ப்பைக் கொடுக்கும் திருப்பூர் வேலைவாய்ப்பின் அட்சயபாத்திர நகரமே...!
இதையும் படிங்க...’மதமும் சாதியும் பயன்படுத்தியவர்களையே பதம் பார்த்துவிடும் என்பதை பாஜக உணர வேண்டும்’