திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில், கண்டெய்னர் லாரியும் கேரள அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட கேரளாவைச் சேர்ந்த 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஹேமந்த் ராஜ் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த 19 பேரின் உடலும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக கொண்டு வரப்பட்டன.
இறந்தவர்களின் உடல்களை கேரளா கொண்டு செல்வதற்காக கேரளா வேளாண்மைத் துறை அமைச்சர் சுனில்குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் சசீந்திரன், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுனில்குமார் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டதால் உயிரிழப்பு குறைக்கப்பட்டது என்று கூறினார்.
அதேபோல் அமைச்சர் சசீந்தரன் கூறுகையில், உயிரிழந்த பயணிகள் அனைவருக்கும் 10 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சாலை விபத்தில் உயிரிழந்த கேரள அரசு பேருந்து ஓட்டுநர்கள் இருவருக்கும் போக்குவரத்துத் துறை சார்பில் காப்பீட்டுத் தொகை 30 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், முதற்கட்டமாக லாரியின் டயர் வெடித்ததுதான் விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஆய்வுசெய்ய போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அவினாசி கோர விபத்து நடந்தது எப்படி? - விவரிக்கும் கிராஃபிக்ஸ் காட்சி