கடலூரைச் சேர்ந்த காத்தவராயன், ராணி தம்பதி தங்களது மகள் சித்ராவுடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள கல்லம்பாளையத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இவர்களது மகள் சித்ரா திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிய ஹென்றி என்பவருடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் ஹென்றியின் சொந்த ஊரான திண்டுக்கல்லில் குடியிருந்து வந்த நிலையில் சித்ரா கர்ப்பமாகியுள்ளார்.
அங்கு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சித்ரா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை சமாதானம் செய்ய வந்த ஹென்றி சித்ராவை மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில், இரண்டு நாள்கள் பல்லடத்தில் தங்கிச் செல்லலாம் என காத்தவராயன்-ராணி தம்பதியர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காத்தவராயன்-ராணி தம்பதியர் வேலைக்கு வெளியே சென்றுவிட்ட நிலையில் சித்ராவிற்கும் ஹென்றிக்கும் மீண்டும் சண்டை எழுந்துள்ளது. இதனை அடுத்து ஹென்றி அருகில் இருந்த கத்தியை எடுத்து சித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் சித்ரா கீழே விழுந்ததும், ஹென்றி வீட்டினுள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காத்தவராயன், மகள் ரத்தவெள்ளத்தில் இருப்பதையும் ஹென்றி தூக்கிட்டு உயிரிழந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
அவர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த பல்லடம் காவல் துறையினர் ஹென்றியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படுகாயமடைந்த சித்ரா பல்லடம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இதையும் படிங்க : 24 மணி நேரத்தில் 109 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் - ஆப்கானிஸ்தானில் பதற்றம்!