திருப்பூர்: பொங்கலூர் வட்டாரம், பெருந்தொழுவு பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி கார்டன் வில்லாவில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,“தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.
தமிழ்நாடு அரசு விதித்த விதிமுறைகள் இந்தி திரைப்படத்திற்கு பொருந்தாது என நினைத்து “டைகர் 3” படத்தின் சிறப்புக் காட்சியை ஒளிபரப்பி விட்டனர். நானும் மனிதன் தான் 100 சதவீதம் தவறு இல்லாமல் இருக்க முடியாது. 10 சதவீதம் தவறு இருக்கதான் செய்யும்.
நல்ல பெயருடன் வெளியே செல்ல முடிவெடுத்து வெளியேறுகிறேன். சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிது படுத்தியிருப்பதால் வெளியேறுகிறேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடியே என் மகன்களிடம் திரையரங்கு நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டேன். எங்கள் திரையரங்கு தகவல் மற்றும் தொழில்நுட்பக்குழு (IT TEAM) சட்டத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் சிறப்புக் காட்சி தொடர்பாக தவறு செய்து விட்டனர்.
ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் x போன்ற படங்களுக்கு சிறப்புக் காட்சி தொடர்பாக விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்தி படத்திற்கு குறிப்பிடப்படவில்லை. அதனால் குழப்பமடைந்த தகவல் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சிறப்புக்காட்சியாக திரைப்படத்தை திரையிட்டு விட்டனர்.
நான் அதற்கு பொறுப்பேற்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். மேலும் தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது. அதனால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். ஆமாம் நான் பகிரங்கமாகவே சொம்பு தூக்குகிறேன் என்று கூறுகிறேன்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு சாதகமாகத்தான் நான் செயல்பட முடியும். ஏனென்றால் நான் வியாபாரி. எனக்கு தெரிந்தவரை புளுசட்டை மாறன் ரொம்ப நேர்மறையான யூடியூபர். அவர் தவறே செய்யாதவர். மற்றவர்கள் என்னைப் பற்றி சொல்லி இருந்தால் கவலை பட்டிருக்க மாட்டேன். அவர் என்னைப்பற்றி சொன்னதும் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க:நவ.18ல் சட்டமன்ற சிறப்பு கூட்டம்.. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் திருத்தமின்றி மீண்டும் நிறைவேற்றம்: சபாநாயகர் அப்பாவு தகவல்!