திருப்பூர்: கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில், இன்று (டிச.30) கோவை - பெங்களூரு புதிய வந்தே பாரத் ரயில் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் திருப்பூருக்கு வந்தபோது, அங்கு பயணிகள், பொதுமக்கள் மற்றும் ரயில்வே துறையினர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் ரயிலில் ஏறிய பெண் பயணிகள் 2 பேர், ரயிலிலேயே தங்களது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
மேலும், இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "வந்தே பாரத் ரயிலில் பயணிப்பது புதுவித அனுபவமாக இருக்கிறது. அதேபோல், நவீன வசதிகளுடன் உயர் தரத்தில் பயணம் செய்வது மகிழ்ச்சியைத் தருகிறது" என தெரிவித்தனர்.
இந்த ரயிலில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி, சொகுசு இருக்கைகள், கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் என பல்வேறு நவீன வசதிகளும் உள்ளது. எட்டு பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில், வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் காலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு, 11.30 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. மறு மார்க்கமாக, பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, இரவு 8 மணி அளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது.
கோவை - பெங்களூரு இடையே 380 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வந்தே பாரத் ரயில் சுமார் 6 மணி நேரத்தில் சென்றடைகிறது. இந்த ரயிலில் சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1,025, எக்ஸிகியூட்டிவ் சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1,930 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.
மேலும், இந்த ரயில் வியாழக்கிழமை தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகிறது. தொழில் நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் இடையே அதிவிரைவு ரயில் சேவைகள் தேவை அதிகளவில் உள்ளது என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: குடும்பத்தார் மறைந்ததுபோல் ஈமச்சடங்குகள்.. விஜயகாந்த் மறைவை உணர்வுப்பூர்வமாக அனுசரித்த குமரக்குடி கிராமத்தினர்!