கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் தடைசெய்யப்பட்டன. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து மத்திய அரசு வெளிமாநிலத்தில் தங்கி பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் அந்தந்த மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும் அதற்கான தொகையை அந்தந்த மாநில அரசுகளே வழங்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியது.
இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என பதிவு செய்திருந்தனர். இதையடுத்து பிகார், ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நான்கு ரயில்கள் மூலம் கடந்த வாரம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதன்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில் ஒன்றுக்கு 10 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நான்கு ரயில்களுக்கு 42 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை காசோலையாக, சேலம் ரயில்வே கோட்டத்திற்கு வழங்கியுள்ளது. மேலும் திருப்பூரிலிருந்து வடமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தற்போது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கூடிய விரைவில் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... 'எப்போது வீடு திரும்புவோம்' - ஏக்கத்தில் வடமாநில லாரித் தொழிலாளர்கள்!