திருப்பூர்: ஆயத்த ஆடை தொழிலில் சிறந்து விளங்கும் திருப்பூர் மாநகரில் மொத்தம் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் அமைந்து உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் பேருந்துகளும், கோவை, ஈரோடு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
பெருமாநல்லூர் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூர் கோயில் வழியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நகருக்கு வெளியில் உள்ள கோயில் வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து தான் பயணிகளை தென் மாவட்டங்களுக்கு ஏற்றி செல்ல வேண்டும். திருநெல்வேலி போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படுகின்ற டி.என் 72 N2164 என்ற அரசு பேருந்து, நேற்று (செப். 2) இரவு 8 மணியளவில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்குள் வந்தது.
அதனை அடுத்து திருச்செந்தூர் செல்லும் பயணிகளை பேருந்தில் ஏற்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. மத்திய பேருந்து நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றிச் செல்ல முயன்ற திருநெல்வேலி போக்குவரத்து கழக பேருந்திற்கு திருப்பூர் போக்குவரத்து அலுவலக மேலாளர் கணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
"தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திற்குள் வருவதற்கு அனுமதி இல்லை. இங்கு வந்து பயணிகளை ஏற்றக் கூடாது. உடனே வெளியே செல்லுங்கள்" என்று திருப்பூர் போக்குவரத்து அலுவலர்கள் கூறி உள்ளனர். ஆனால் திருநெல்வேலி போக்குவரத்துக் கழக பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் அப்படித்தான் ஆட்களை ஏற்றி செல்வோம் என்று கூறி திருப்பூர் போக்குவரத்து கழக அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரவு வெகுநேரமானதால் பேருந்தில் இருந்த சில போதை ஆசாமிகளும், "நாங்கள் திருநெல்வேலி செல்கிறோம், இந்த பஸ்ஸில் தான் செல்வோம்" என்று அடம்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் திருச்செந்தூர் செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்ல திருப்பூர் போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தமான பேருந்தை வரசெய்தனர். அதற்குள் திருப்பூரா?, திருநெல்வேலியா? என்ற அடிப்படையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருநெல்வேலி பேருந்தில் பயணிகளை ஏற்றக்கூடாது என்று திருப்பூர் அலுவலர்களும், அப்படித்தான் ஏற்றுவோம் என்று திருநெல்வேலி போக்குவரத்து கழக ஊழியர்களும் தொடர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பேருந்து நிலைய காவலர் வந்து சமரசம் பேசி திருச்செந்தூர் செல்லக் கூடிய திருநெல்வேலி போக்குவரத்து கழக பேருந்தினை அனுப்பி வைத்தார்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்குள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிய திருநெல்வேலி போக்குவரத்து கழக ஊழியர்களின் செயல் காண்போரை முகம் சுழிக்க வைத்தது. திருப்பூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டி! முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!