திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கணக்கம்பாளையம் பிரிவைச் சேர்ந்த 15 பேர், இன்று (ஜன.08) அதிகாலை மைசூர் சாமுண்டேஸ்வரி கோயிலுக்கு டெம்போ டிராவல் வேனில் சென்றுகொண்டிருந்தனர். அந்த வேனை ஓட்டுநர் அருண் ஓட்டினார்.
அப்போது, தமிழ்நாடு-கர்நாடக எல்லையான செர்ணாவதி அணை மூடஹள்ளி என்ற இடத்தில் திடீரென எதிரே வந்த லாரியின் மீது வேன் மோதாமல் இருக்க வேனை திருப்பியுள்ளார். அப்போது, வேன் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனிலிருந்த சுப்பிரமணியம் (60), அமராவதி (58), கோகிலா (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், வேன் ஓட்டுநர் அருண், எட்டு பெண்கள், நான்கு ஆண்கள் என மொத்தம் 13 பேர் காயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதியினர் அவர்களை மீட்டு சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சாம்ராஜ்நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தீப்பிடித்து எரிந்த பைக்: கார் - பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு