திருப்பூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியில் அமலராஜ் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த பிளாஸ்டிக் குடோனில், டையிங் நிறுவனங்களிலிருந்து சேகரித்து வரப்படும் பிளாஸ்டிக் கேன்கள், பிளாஸ்டிக் கழிவுகள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை அடுக்கி வைக்கபட்டிருந்தன.
இதையடுத்து, குடோனில் பணிபுரியும் தொழிலாளர்கள் மாலை ஆறு மணிக்கு குடோனைப் பூட்டிவிட்டுச் சென்றனர். இந்நிலையில், குடோனிலிருந்து தீடிரென புகை வெளியே வந்தது. இதைக் கண்ட அப்பகுதியினர் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்களுடன் இணைந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா, மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கெமிக்கல் நிறுவனங்களிலிருந்து எடுத்து வரப்படும் கேன்கள் ஒரு சிலவற்றில், ரசாயனங்கள் தேங்கியிருந்ததாலேயே தீயானது உடனடியாக கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், தீயணைப்புத் துறையினர் அங்கு வருவதற்குள் தீயானது மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால், புகைமூட்டமானது இரண்டு கிலோமீட்டர் வரைச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாதாள சாக்கடைக்காக வைக்கப்பட்டிருந்த குழாய்களில் தீ பிடிப்பு