திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வட்டமலை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கார்பன் உற்பத்தி செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தேங்காய் ஓடுகளை எரித்து அதிலிருந்து ஆக்டிவ் கார்பனேட் தயாரித்து வருகின்றனர். இந்த கார்பன் துகள்களை சுத்திகரிக்க ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி, அதனை அப்படியே வெளியேற்றுவதால் விவசாய நிலங்கள் பாதிப்புள்ளாகிறது.
அதுமட்டுமில்லாமல், தென்னை மரங்களின் மீதும் படிந்து விவசாயம் மற்றும் கால்நடை மேய்ச்சல் கடுமையாக பாதிக்கிறது. அப்பகுதியை சுற்றியுள்ளவர்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நிறுவனத்தை மூட வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.
மேலும், இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் வரும் 26ஆம் தேதியன்று தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடைகளுடன் குடியேறி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் விவசாயிகள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: மொத்தம் 14 ஆயிரத்து 962 மாணவர்கள் புதுச்சேரியில் தேர்வெழுதினர்