மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு வரும் வெள்ள நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி எந்நேரமும் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் பாலாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு கடந்த 23 ஆண்டுகளுக்குப் பின் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம் ஆழியாறு தொகுப்பணைகளில் எட்டாவது நீர்த்தேக்க அணையாக இருப்பது திருமூர்த்தி அணையாகும். இதன் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் குளிப்பட்டி, மாவடப்பு, குருமலை, ஈசல்திட்டு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக திருமூர்த்தி அணைக்கு பஞ்சலிங்க அருவி வழியாக நீர்வரத்து வினாடிக்கு 1700 கன அடியாக உள்ளது.
இதனால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவான 60 அடியில் தற்போது 59.05 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் எந்நேரமும் திறக்கப்படும் என்பதால் பாலாற்றின் கரையோரம் உள்ள உடுமலை, பொள்ளாச்சி வட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த 1997க்கு பிறகு தற்போதுதான் திருமூர்த்தி அணையில் இருந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2015க்கு பின் 5 ஆண்டுகள் கழித்து அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது.
இதையும் படிங்க:குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!