திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி பகுதியைச் சேர்ந்தவர் துல்பியா. இவரது தந்தை ஷாஜகான் வாடகை வாகன ஒட்டுநர். பொருளதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தாலும் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல் நிலைபள்ளியில் நல்ல முறையில் படித்து வந்த துல்பியா, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றார். பின்னர் எவ்வித பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், ஆசிரியர்களின் உதவியோடு படித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றார்.
இதையடுத்து மருத்துவ கவுன்சலிங் முறையில் இவருக்கு கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆனால், விண்ணப்பம் வாங்க 25,000 ரூபாய், கல்லூரியில் சேர ரூ. 5 லட்சத்துக்கும் மேல் பணம் கட்ட வேண்டிய சூழல் நிலவியதால், தனக்கு கிடைத்த இடத்தை காத்திருப்பில் வைத்துள்ளார்.
இதனால், இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்நிலையில், 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. தாமதமாக வெளிவந்த அரசின் அறிவிப்பால் தனது மருத்துவராகும் கனவு, கனவாகவே கரைந்து விட்டதாக கூறுகிறார் மாணவி துல்பியா.
"மருத்துவராக வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. நீட் தேர்வில் எந்தவித பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல் தேர்ச்சி பெற்றேன். கவுன்சிலிங் முறையில் மருத்துவக் கல்லூரிகளில் எனக்கு இடம் கிடைத்தும் பண வசதி இல்லாததால் என்னால் மருத்துவம் படிக்க முடியவில்லை.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு கிடைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தும் என்ற அறிவிப்பு தாமதமாக வந்ததால் என்னால் மருத்துவம் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு எனது நிலையை கருத்தில் கொண்டு மருத்துவராகும் எனது கனவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என துல்பியா வீடியோ வெளியிட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'மற்றொரு அரசுப் பள்ளி மாணவருக்கு சீட் கிடைக்கும் என்பதால் 7.5% இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தவில்லை'