திருப்பூர்: பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாதப்பூர் ஒன்றிய பஞ்சாயத்து கிளை தலைவராக உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை மோகன்ராஜுக்கு சொந்தமான இடத்தில் மூன்று பேர் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. மேலும், பாட்டில்களையும் அந்த இடத்திலேயே உடைத்ததாக கூறப்படுகிறது. அப்போது வெளியில் இருந்து வந்த மோகன் ராஜ் வீட்டிற்கு செல்லும் வழியில் மது அருந்தி அவர்களை கண்டதும் தன் இடத்தை விட்டு வெளியேறுமாறு கோபமுடன் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் நான்கு பேர் உடலும் பரிசோதனை செய்யப்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
படுகொலை செய்யப்பட்ட நபர்களின் உறவினர்கள் மற்றும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடல்களை கைப்பற்ற விடாமல் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை செய்த நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் உறுதி அளித்ததற்குப் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் என அனைவரும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரற்ற நிலையில் செயல்படுகிறது என இந்த கொலைச் சம்பவம் குறித்து அவர்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் குவிந்த நிலையில், பாதுகாப்பிற்காக திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடித்தப்பட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பின்னரும், காவல் துறையினர் கொலை செய்த நபர்களை கைது செய்யாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு, கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் திருச்சி நோக்கி செல்லும் வாகனங்களை 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் வழிக்கு மாற்றப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட வைத்தனர். கொலைச் சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது, வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா எனத் தெரியவந்தது. குறிப்பாக வெங்கடேசன் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கள்ளக்கிணறு பகுதியில், மோகன்ராஜ் உணவகத்திற்கு எதிரே இறைச்சிக்கடை வைத்திருந்ததும் தெரிய வந்தது.
மேலும், மோகன்ராஜ் தனது உணவகத்தை மற்றொரு நபருக்கு வாடகைக்கு விட்டிருந்த நிலையில், வாடகை எடுத்த நபர் வெங்கடேசிடம் கோழி இறைச்சி பெற்று பணம் தரவில்லை என மோகன்ராஜ்க்கு சொந்தமான சிலிண்டர் மற்றும் கோழி கூண்டுகளை வெங்கடேஷ் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மோகன்ராஜ் மற்றும் வெங்கடேஷிற்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெங்கடேஷ் கோழிக்கடையை எடுத்துவிட்டு, மோகன்ராஜின் தம்பி செந்தில் குமாரிடம் ஓட்டுநராக இரண்டு மாதம் பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பல்லடம் அருகே சுற்றித்திரிந்த செல்லமுத்துவை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இரண்டு பேர் வெளி மாவட்டங்களில் மறைந்துள்ளனர் என்ற ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை காவல்துறையினர் தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்தனர். நேற்று மாலை மோகன்ராஜின் உடற் கூராய்வு முடிந்த நிலையில், கொலையாளிகளை கைது செய்யும் வரையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இன்று காலை செல்லமுத்துவிடம் நடைபெற்ற விசாரணையில், செல்லமுத்து குற்றத்தை ஒப்புக் கொண்டார். விசாரணையில், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தொட்டியம்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டியில் வீசிச் சென்றதாக கூறியுள்ளார். எனவே ஆயுதத்தை மீட்க செல்லமுத்துவை காவல் துறையினர் அழைத்துச் சென்ற போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறுவது போல நடித்து தப்பிக்க முயன்றார். அப்போது தவறி விழுந்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனையடுத்து செல்லமுத்துவிற்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மோகன்ராஜின் உறவினர்கள் காவல் துறையின் நடவடிக்கையில் அதிருப்தி தெரிவித்த நிலையில், கொலை செய்த குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதியளித்தனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் காவல்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் உடல்களை பெற்றுக் கொண்டு இறுதி மரியாதை செய்து கள்ளக்கிணறு பொது மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க: Palladam family murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணமா? பின்னணி என்ன?